ராணுவ துறையில் இந்தியாதான் பிரதான கூட்டாளி: அமெரிக்கா மீண்டும் உறுதி | ESSAAA

Copyright © 2017ESSAA. All rights reserved.

ராணுவ துறையில் இந்தியாதான் பிரதான கூட்டாளி: அமெரிக்கா மீண்டும் உறுதி

admin's படம்
Submitted by admin on புத, 19/04/2017 - 08:44
தமிழ்

 

படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.

இந்தியா தான் பிரதான ராணுவ கூட்டாளியாக இருக்கும் என அமெரிக்கா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. 

அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின்போது, ராணுவத்துறையில் இந்தியா, அமெரிக்கா இடையே நெருங்கிய உறவு நீடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ராணுவத் துறையில் இந்தியா பிரதான கூட்டாளியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 

தற்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், ஒபாமாவின் முக்கியமான கொள்கை முடிவுகளை ரத்து செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹெச்.ஆர்.மெக்மாஸ்டர் இந்தியா வந்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது ராணுவத் துறையில் இந்தியாதான் அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாக இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்தார். தவிர, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்தித்து பேசினார். 

பின்னர் இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிராந்திய மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் சார்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ராணுவம் மற்றும் தீவிரவாத ஒழிப்புக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவு எவ்வளவு முக்கியம் என்பதை மெக்மாஸ்டர் அப்போது எடுத்துரைத்தார். மேலும் அமெரிக்காவின் பிரதான ராணுவ கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் உறுதி செய்தார். இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த சந்திப்பு மிகுந்த ஆக்கப்பூர்வமாக அமைந்தது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், அவரது நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக மெக்மாஸ்டர் திங்கள் மாலை பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

Post Categories: